Sri Lanka into a regional hub for education
எமது நாட்டு மாணவர்கள் வெளிநாடுகளில் கல்வி கற்பதற்காக வருடாந்தம், 03 பில்லியன் டொலர் நிதி செலவாவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
உரிய முறையில் வேலைத்திட்டங்கள் முறையாக முன்னெடுக்கப்பட்டால் இந்த மூன்று பில்லியன் டொலர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்க்கவும் அத்துடன் மேலும் 10 பில்லியன் டொலர்களை பெற்றுக் கொள்வதற்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியுமென்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்தார்.
25 ஆண்டுகள் முன்னோக்கி செல்லக்கூடிய கல்வி திட்டங்களே எமது நாட்டுக்கு அவசியமென சபையில் குறிப்பிட்ட அவர், பாரிய பல்கலைக்கழகங்கள் எம்மிடம்இல்லாவிட்டாலும் கல்விக்கான பிராந்திய வலயமாக இலங்கையை திகழச்செய்ய முடியுமென்றும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கல்வியமைச்சுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
1946ஆம் ஆண்டு இலவசக் கல்வி நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.அக்காலத்தில் இருந்ததைப்போல் தொடர்ந்தும் பாடசாலைகளை கொண்டு நடத்த முடியாது. கல்வித்துறையில் மாற்றங்கள் அவசியம். அக்காலத்தில் இயங்கிய பாடசாலைகள் வேண்டுமா? அல்லது 1980ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்ததைப்போல் பாடசாலைகள் வேண்டுமா? என்பதைப் பற்றி சிந்திக்காது 2023ஆம் ஆண்டில் இருந்து 25 ஆண்டுகள் முன்நோக்கிப் பயணிக்கக் கூடிய பாடசாலைகளே எமக்குத் தேவை என்பதை சிந்தித்து அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.