Providing Lunch Food to pre-school students
உலக வங்கியின் ஆதரவின் கீழ் முன்பள்ளி பிள்ளைகளுக்கான பகல் உணவு வழங்கும் நடவடிக்கை இந்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என ஆரம்ப குழந்தை பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது .
35 ஆயிரம் மலையக பிள்ளைகள் மற்றும் போசாக்கு குறைபாடுள்ள பகுதிகளில் வாழும் 1 இலட்சத்து 55 ஆயிரம் சிறார்களுக்கு இந்த மதிய உணவு வழங்கப்படவுள்ளதாக அதன் பணிப்பாளர் நயன எஸ்.பி.கே.டி சில்வா தெரிவித்துள்ளார் .
தற்போது , 90 ஆயிரம் போசாக்கு குறைபாடுள்ள முன்பள்ளி சிறார்களுக்கு காலை உணவு வழங்கப்படுவதுடன் , அதற்காக விநியோகத்தர்களுக்கு தலா உணவு ஒன்றுக்கு 30 ரூபா வழங்கப்படுகின்றது .
எனினும் , அந்தத் தொகை போதாது என்பதால் அதனை 60 ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது . அதற்கான பணம் உலக வங்கியின் உதவியின் கீழ் வழங்கப்படவுள்ளது .
மேலும் இந்த மாதம் முதல் காலை உணவுக்கு பதிலாக தற்போதைய செய்முறையை திருத்தி மதிய உணவாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார் . இதனிடையே , கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 2 ஆயிரம் ரூபா சத்துணவுப் பொதி விநியோகம் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது .
எவ்வாறாயினும் , பல மாவட்டங்களில் மீண்டும் போஷாக்கு பொதிகள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் , அடுத்த சில வாரங்களில் நாடளாவிய ரீதியில் விநியோகம் மீள ஆரம்பிக்கப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிவித்துள்ளது.
