81 school students in rehabilitation centers
81 பாடசாலை மாணவர்கள் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் அபாயகரமான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபை மற்றும் பொலிஸ் திணைக்களத்துடன் இணைந்து வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதுவரை, ஐஸ் போதைப்பொருள் தொடர்பாக சட்டபூர்வமான சூழ்நிலை இல்லை.இப்போது ஐந்து மில்லிகிராம் ஐஸ் வைத்திருந்தாலும் மரண தண்டனை விதிக்கப்படலாம்.
விஷ மருந்துகள் தொடர்பான சட்டம் நூற்று எழுபத்தி எட்டு வகைகளைக் கொண்டுள்ளது.சமுதாயம் இதை உணர்ந்து கொள்ள வேண்டும். பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மேலும் குறிப்பிட்டார்.
குறிப்பாக கொழும்பின் சில பிரதேசங்களில் இவ்வாறான நிலைமைகள் அதிகமாக காணப்படுகின்றன.
பாடசாலைகளுக்கு போதைப்பொருள் கொண்டு வரப்படுவதை தடுக்கவும், பெற்றோருக்கு தெரியப்படுத்தவும் அமைச்சு விசேட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இவ்வாறான சூழ்நிலைகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
போதையில் இருந்து பாடசாலை மாணவர்களை காப்பாற்ற தொடர் வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது எனவும் குறிப்பிட்டார்.